சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள விவசாய தோட்ட பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக மாலை நேரங்களில் உள்ளே புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பதில் யானை ,புலி, சிறுத்தைபுலி,
கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காவும் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்கி கொல்லுவதும்
தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில், கடம்பூர் மலைப் பகுதி பூதிக்காடு மலை கிராம பகுதியில் கடந்த
4 நாட்களாக மாலை நேரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று விவசாய
நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த
நிலையில் பூதிக்காடு கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் விவசாய தோட்டத்திற்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. பின்பு அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் மற்றும் பூசணிக்காய் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் காலால் மிதித்து, தின்னும் சேதப்படுத்தியது.
இதனை அடுத்து அப்பகுதி மக்கள் கடந்த நான்கு நாட்களாக கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், வனத்துறையினர் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபடாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்த ஒற்றை யானையை தினந்தோறும் வனத்திற்குள் விரட்டியடித்து வருவது தொடர்கதையாக உள்ளது. எனவே, வனத்துறையினர் யானை, மனித மோதல் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
—-ம. ஶ்ரீ மரகதம்







