மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2வது முறையாக தமிழகம் வந்துள்ளார்.
இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், கூட்டணி கட்சிகளான அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர், ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். இதனிடையே கூட்டம் நடைபெறும் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் 20-க்கும் மேற்பட்ட குழுக்களாக மோப்பநாய் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியை சுற்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் தஞ்சையில் உள்ள விமானப்படை தளத்திற்கு மதியம் 1.55 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் 2.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.







