காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அருகே கண்காணிப்பு கேமிராக்கள் மாயமான சம்பவத்தால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் தொழிற்பேட்டையில்
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. விபத்துகளை
தவிர்க்கவும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும், மாவட்ட
காவல் துறையினர் கோரிக்கை ஏற்று தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், 110
அதிநவீன சிசிடிவி கேமராக்கள் ஶ்ரீபெரும்புதூர் – சிங்கப்பெருமாள் கோவில் சாலை,
வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் பொருத்தப்பட்டன.
குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள், விபத்து நிகழும் இடங்கள் உள்ளிட்ட
பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம், விபத்தை
ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களின் எண்களை துல்லியமாக
கண்டுபிடிக்க இந்த கேமிராக்கள் பொருத்தப்பட்டன.
இந்நிலையில், ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவரியம்பாக்கம்,
பண்ருட்டி, வெண்பாக்கம், எழிச்சூர் உள்ளிட்ட பகுதியில் வண்டலூர் வாலாஜாபாத்
சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் பல மாதங்களாக காணவில்லை.
இதேபோல் தாழையம்பட்டு, குன்னவாக்கம், வாரணவாசி உள்ளிட்ட பகுதிகளில்
பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் தலை கீழாக இருக்கின்றது.
மேலும், சிசிடிவி கேமராக்கள் தலைகீழாக உள்ள கேமராவை சரி செய்யாமலும்
இருக்கின்றனர். எனவே, ஒரகடம் போலீசார் சிசிடிவி கேமராக்களை முறையாக
பராமரிக்க வேண்டும் என்றும், காணாமல் போன கேமராக்களுக்கு பதிலாக புதிய
கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கு. பாலமுருகன்







