நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைதேரி கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. மக்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.
பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (57) மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானாா். பல திரைப்படங்களில் நடித்தும், உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. இவர் தேனி மாவட்டம் வருசநாடு அருகே பசுமலைதேரி கிராமத்தைச் சேர்ந்தவர். திரைப்பட இயக்குநராக விரும்பிய மாரிமுத்து 1990-ம் ஆண்டு, தனது வீட்டை விட்டு ஓடிவந்தார். துவக்கத்தில் உணவகங்களில் பணியாளராக வேலை செய்தார்.
பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக இணைந்து அவரது படங்களான அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் பணிபுரிந்தார். பின்னர் இயக்குநர் எஸ்.ஜெ. சூர்யாவின் வாலி திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார்.
இவர் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ’கண்ணும் கண்ணும்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவர் கடந்த 2014-ம் ஆண்டு ’புலிவால்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இயக்கம் பெரிதாக கை கூடாத நிலையில், மீண்டும் நடிப்பு பக்கம் கவனம் செலுத்தி வந்த அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இவர் பரியேறும் பெருமாள், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். வில்லன் வர்மாவின் வலதுகரமாக அந்த படத்தில் அவர் நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அவருக்கு பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது.
அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று, “ஜோதிடர்கள் தான் இந்தியாவை பின்னோக்கி தள்ளுகின்றனர்” என்று கூறியவர். இதனால் இவர் மீது பலர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், 56 வயதான நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்துவுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் மாரிமுத்துவின் உடல் நேற்று(வெள்ளிக்கிழமை) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலக பிரபலங்கள் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.
தொடர்ந்து, மாரிமுத்துவின் இறுதிச் சடங்கு, அவரது சொந்த ஊரான பசுமலைதேரியில் இன்று (செப்.9) நடைபெற்றது. காலை முதல் அவரது ஊர் மக்கள், உறவினர்கள் பலரும் வந்து மாரிமுத்துவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இதன்பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 2.30 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட்டது. மக்கள் கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.







