இந்தியாவில் மீண்டும் பப்ஜி: சோதனை அடிப்படையில் 3 மாதங்களுக்கு அனுமதி!

இந்தியாவில் சோதனை அடிப்படையில் 3 மாதங்களுக்கு பப்ஜி விளையாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். காலை, இரவு என நேரம் பாராமல் இளைஞர்கள் பலர் இதனை…

இந்தியாவில் சோதனை அடிப்படையில் 3 மாதங்களுக்கு பப்ஜி விளையாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். காலை, இரவு என நேரம் பாராமல் இளைஞர்கள் பலர் இதனை விளையாடி வந்தார்கள். தென் கொரியாவைச் சேர்ந்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்தியாவில் குறுகிய காலத்திலேயே இந்த விளையாட்டு பெரும் வரவேற்பை பெற்றது. எனினும், இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது, 2020ம் ஆண்டு பல்வேறு சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதில் பப்ஜியும் ஒன்று. முதலில் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்த செயலி, பிறகு மொத்தமாக முடக்கப்பட்டது.

பின் பப்ஜி விளையாட்டில் சில மாற்றங்கள் செய்து பிஜிஎம்ஐ (பேட்டில் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா) என்ற பெயரில் கிராப்டன் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்தது. இந்த பிஜிஎம்ஜ விளையாட்டும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த செயலியை மத்திய அரசு தடை செய்தது. கிராப்டன் தென் கொரியாவை சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும், சீனாவின் டென்சென்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால் பிஜிஎம்ஜ விளையாட்டும் எடுக்கப்பட்டது.

இந்த பிஜிஎம்ஜ விளையாட்டு மீண்டும் இந்தியாவுக்கு வரவிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. அதனால் பப்ஜியின் வரவை அதன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். சுமார் 10 மாதங்களாக இந்தியாவில் பிஜிஎம்ஐ விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பிஜிஎம்ஐ கேமை கிராப்டன் நிறுவனம் மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மாதங்கள் சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வர் இருப்பிடங்கள் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான இந்திய அரசின் விதிமுறைகளுக்கு கிராப்டன் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து, மூன்று மாதத்திற்கு சோதனையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.