தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைமை அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தேசியக்கொடி ஏற்றினார். தேசியக்கொடி ஏற்றிய பின் சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், சாரண, சாரணியர் இயக்க மாநில தலைவர் மணி, முதன்மை ஆணையர் இளங்கோவன், மாநில ஆணையர்கள் கண்ணப்பன், ஹரிஷ் மேத்தா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம். ராணுவக் கட்டுப்பாடுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சாரண, சாரணியருக்கு வாழ்த்துகள். நிலாவில் கால் வைத்தவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தை சேர்ந்தவர்கள். ஆரம்பகாலம் முதல் நாட்டுக்காக பாடுபட்ட வீரர்கள், தியாகிகளுக்கு உதவிடும் இயக்கம் தான் திமுக. சாரண, சாரணியர்களுக்கு என்றும் உறுதுணையாக நான் இருப்பேன் என பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். தனியார் பள்ளிகள் 11ம் வகுப்பு பாடங்களை முறையாக நடத்தாததால் தான் அதற்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. அதில் குழப்பம் தேவையில்லை. அதே நடைமுறை இனிமேலும் தொடரும். தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது.
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் பெற்றோர்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளைத் தொடங்குவது பற்றி பெற்றோர்களின் கருத்தறிந்து முடிவு எடுக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 25,000 கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும். கிடைக்கும் நிதியைக் கொண்டு படிப்படியாக கழிப்பறைகள் கட்டப்படும். 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்றார்.







