சமீபத்தில் திரிபுராவில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இரண்டு பத்திரிகையாளர்கள் அரசுக்கு எதிராக மக்களை தூண்டியுள்ளனர் என திரிபுரா மாநிலத்தின் தொழில்நுட்ப துறை அமைச்சர் சுசாந்தா சவுத்ரி விமர்சித்துள்ளார்.
பங்களாதேஷில் கடந்த சில நாட்களுக்கு முன் துர்கா பூஜையின்போது வன்முறை வெடித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேஷின் அண்டை மாநிலங்களிலும் கலவரம் பரவியது. திரிபுராவிலும் இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதில் சிலரின் கடைகள், மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வந்ததை அடுத்து, கலவரம் உண்டானது. இதுகுறித்த புலனாய்வு செய்திகளை HW நியூஸ் என்ற நிறுவனத்தின் செய்தியாளர்கள் சம்ருதி சகுனியா, ஸ்வர்னா ஜா ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்-ஆன்-ஐ எரித்ததாக அதற்கான வீடியோவையும் பத்திரிகையாளர்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து திரிபுரா டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த வீடியோவில் உண்மைத்தன்மை இல்லையென்று கூறியுள்ளது. இதுபற்றி விஷ்வ இந்து பரிஷத் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
திரிபுராவில் இருந்து அசாம் மாநிலத்துக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டு திரிபுராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு போலீசார் அவர்களை கைது செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்திய எடிட்டர்ஸ் கில்ட் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், திரிபுராவின் கோமதி மாவட்ட தலைமை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரிபுரா மாநிலத்தின் தொழில்நுட்ப துறை அமைச்சர் சுசாந்தா சவுத்ரி, “இந்த இரண்டு பத்திரிகையாளர்கள் மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக தூண்டிவிடும் முயற்சியை செய்துள்ளனர். மட்டுமல்லாது இவர்கள் இஸ்லாமிய சமூகத்தை புதிய கட்சியின் பின்னால் ஒன்றிணைக்க முனைந்துள்ளனர்.” என்று குற்றம்சாட்டியுள்ளார். இது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“இவர்கள் கள நிலவரத்தை வெளியிடுவது எங்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் மக்களை தூண்டும் வகையிலான பதிவுகளை ஏன் வெளியிட வேண்டும். அமராவதியில் சிறுபான்மையினர் கிளர்ந்தெழுந்ததை எங்களால் காண முடிந்தது.” என அமைச்சர் தொடர் குற்றச்சாட்டுகளை பத்திரிகையாளர்களுக்கு எதிராக முன்வைத்துள்ளார்.








