நேபாளத்திற்கு உடனடியான மற்றும் விரிவான மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குமாறு இந்திய அரசை வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, “சமீபத்திய கடும் வெள்ளப்பெருக்கினால் நேபாளம் ஒரு தீவிரமான இயற்கை பேரிடரை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், ஆழ்ந்த துயரத்துடன் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். உயிர் இழப்புகள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளின் பரவலான அழிவு மற்றும் எண்ணற்ற மக்கள் இடம்பெயர்ந்த நிலை ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளன.
இந்திய மக்களுக்கும் நேபாள மக்களுக்கும் இடையே ஆழமான மற்றும் நீண்டகால பிணைப்பு உள்ளது. இந்தத் துயரமான வேளையில், இந்தியா தனது அண்டை நாட்டினருடன் உறுதியாக நிற்க வேண்டும்; மேலும், இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்.
நேபாளத்திற்கு உடனடி மற்றும் விரிவான மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். குறிப்பாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, வெளியேற்றம் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ, நேபாள அரசுடன் ஒருங்கிணைந்து தேவைப்படும் இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழுக்களை அனுப்புவது குறித்து பரிசீலிக்கலாம்.
இயற்கை பேரிடர்களைக் கையாள்வதில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) நிபுணத்துவம் மற்றும் அனுபவம், உயிர்களைக் காப்பதிலும், இந்த மாபெரும் துயரத்தை எதிர்கொள்பவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதிலும் மதிப்புமிக்க ஆதரவை அளிக்கும். உள்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தின் அவசரத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு இந்தியாவின் உதவிகளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று நான் மனதார நம்புகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




