தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் விஜயின் பிரச்சாரத்தை தடுக்க முயன்றதாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் கார்த்திகா மீது வழக்கு பதிவு செய்யப்பட நிலையில் அவர் நேற்று காலை கைது செய்யப்பட்டார். மேலும் அவருடன் 10 நாதகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அர்சியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்திய தவெக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாதக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளரும் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.கார்த்திகா அவரது கணவரும், தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முருக.சந்திரகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இசை.மதிவாணன் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்து சிறைப்படுத்தியிருக்கும் தவெக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில், வருகின்ற 24-10-2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கிறது.
இக்கண்டன ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




