காவலர் வீர வணக்க நாளான இன்று (அக்.21) நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் உயரிய கடமையில் ஈடுபட்டு, இன்னுயிரை ஈந்த காவலர்கள் அனைவருக்கும் அக்டோபர் 21 – காவலர் வீரவணக்க நாளில் எனது நெஞ்சார்ந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது அன்பையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் நிம்மதியாக உறங்குவதற்காகத் தங்கள் உறக்கத்தைத் துறப்பவர்கள் காவலர்கள். நாம் குடும்பத்தோடு விழாக்களைக் கொண்டாடும்போது, தங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து வீதிகளில் காவல் நிற்பவர்கள் அவர்கள். கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பேரிடரிலும், பெருந்தொற்றிலும் மக்களுக்காகக் களத்தில் நிற்கும் காவலர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அளப்பரியவை. ஆனால், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவலர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டிய அரசுகள், அவர்களது அடிப்படைத் தேவைகளில் போதிய அக்கறை காட்டுகின்றனவா என்ற கேள்வியை இந்நாளில் எழுப்ப வேண்டியுள்ளது.
இராணுவத்தில் பணியாற்றுவோர் தொடங்கி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவோர் வரை அனைவருக்கும் ஓய்வும் விடுப்பும் இன்றியமையாத உரிமைகளாக இருக்கும்போது, காவலர்களுக்கு மட்டும் அவற்றை நடைமுறையில் பெறுவது ஏன் இவ்வளவு கடினமாக இருக்க வேண்டும்? வார விடுமுறையைக்கூட உறுதியாகத் திட்டமிட முடியாமலும், குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமலும் காவலர்கள் தவிக்கும் நிலை தொடரலாமா? நீதி வழங்கும் நீதிமன்றகளுக்கே திட்டமிடப்பட்ட விடுமுறைகள் இருக்கும் பொழுது அதை கட்டிக்காக்கும் காவலர்களுக்கும் அது தேவை தானே?
காவலர்களும் மனிதர்கள்தானே! அவர்களுக்கும் குடும்பம், உறவுகள், உடல்நலம், மனநலம் இல்லையா? சீருடை அணிந்துவிட்டால் ஓய்வே தேவையில்லை என்று அரசு கருதுகிறதா? காவல்துறை இடையறாது இயங்க வேண்டிய துறை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக ஒவ்வொரு காவலரும் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்பது எவ்விதத்தில் நியாயம்? போதிய எண்ணிக்கையில் காவலர்களை நியமித்து, முறையான சுழற்சிப் பணியை ஏற்படுத்தி, அனைவருக்கும் வார ஓய்வும் உரிய விடுப்பும் கிடைக்கச் செய்வது அரசின் கடமையாகும்.
எனவே, காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, வரையறுக்கப்பட்ட பணிநேரத்தையும் கட்டாய வார ஓய்வையும் உறுதிசெய்ய வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் விடுமுறை நாளில் பணியாற்ற நேரிட்டால், மாற்று ஓய்வு வழங்கப்பட வேண்டும். குடும்ப அவசரங்கள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கான விடுப்பைத் தாமதமின்றி வழங்குவதோடு, மனநல ஆலோசனை, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட நலத்திட்டங்களையும் வலுப்படுத்த வேண்டும். பணியின்போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு உரிய நிதியுதவி, குழந்தைகளின் கல்விப் பாதுகாப்பு, தகுதியுள்ள குடும்ப உறுப்பினருக்கான வேலைவாய்ப்பு ஆகியவை காலதாமதமின்றிக் கிடைப்பதையும் அரசு உறுதிசெய்ய வேண்டும்.
மக்களின் உரிமைகளைக் காக்கும் பொறுப்பிலுள்ள காவல்துறை, சட்டத்திற்கும் மனிதநேயத்திற்கும் உட்பட்டு, அரசியல் தலையீடின்றிச் செயல்படுவதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும். காவலர்களின் நலனும் மக்களின் உரிமைகளும் ஒருசேரப் பாதுகாக்கப்படுவதே நல்லாட்சிக்கு அடையாளமாகும். உயிர்நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைப்பதோடு அரசின் கடமை முடிந்துவிடுவதில்லை. உயிரோடு பணியாற்றும் காவலர்களின் கண்ணியமான வாழ்வை உறுதிசெய்வதே அந்தத் ஈகத்திற்குச் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




