தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்படைகிறது எனக்கூறி போராட்டம் நடைபெற்றது, இந்நிலையில் இந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13பேர் பலியாகினர்.
அதேவேளையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டதாகக்கூறி அதனை மூடி தமிழக அரசு ஆணை வெளியிட்டது. அந்த ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருநது வருகிறது.
இந்நிலையில் , ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி , தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம், எம்.ஏ.கே இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அடையாள போராட்டம் நடைபெற்றது.
அப்போது, இந்தியாவின் காப்பர் தயாரிப்பில் சுமார் 50% ஸ்டெர்லைட் பங்கு உள்ளது. இந்த ஆலை மூடப்பட்டதால் தொழிலாளர்கள் கடுமையாக பாதித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடியதால், ஸ்டெர்லைட் ஆலையால் வாழ்வாதாரம் பெறும், வணிகர்கள், ஒப்பந்ததாரர்கள் , நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறுவோர் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என்று கூறுவது தவறான கருத்து எனவும் , வெளிநாட்டு சதியால்தான் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றதாக குற்றம் சாட்டினர். குறிப்பாக, இந்த விவகாரம் இந்தியா மீது பொருளாதார ரீதியான சர்வதேச தாக்குதல் என்றும் , காப்பர் சர்வதேச அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள், இதன் காரணமாகவே சீனா இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது என குற்றம் சாட்டினர்.
அண்மைச் செய்தி: 25000 எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் உபர்
தூத்துக்குடியின் முன்னேற்றம் என்பது ஸ்டெர்லைட் ஆலைதான் எனக்கூறிய அவர்கள், தூத்துக்குடி மக்களின் வாழ்வாதரமாக விளங்கிய ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் மீண்டும் ஆலையை இயக்க வேண்டும்,எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.







