பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து 385 நாட்களாக நடைபெறும் போராட்டம்! முதன்முறையாக பேச்சுவார்த்தை நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்!

பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து 385 நாளாக போராடி வரும் மக்களிடம் முதன்முதலாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து நாளை நடைபெற இருந்த பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.   நாளை…

பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து 385 நாளாக போராடி வரும் மக்களிடம் முதன்முதலாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து நாளை நடைபெற இருந்த பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.  

நாளை சுதந்திர தினத்தை ஒட்டி பேரணி நடத்த இருந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று பேரணியை ரத்து செய்துவிட்டு கிராம சபை புறக்கணிப்பு போராட்டமும் வீடுகளில் கருப்பு கொடி எந்தும் போராட்டம் நடைபெறும் என புதிய விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட கூட்டியக்கம் அறிவித்திருந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13
கிராமங்களை உள்ளடக்கி 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2வது புதிய பசுமை
வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம்,
மேலேறி ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும்
அகற்றப்பட உள்ளது. விமான நிலையம் அமைப்பதினால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைப்பதால் பாதிக்கப்படும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர்
போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 385-வது நாளாக போராட்டம்
நடுத்தி வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை 6 முறை கிராம சபை கூட்டத்தில் 13 கிராம மக்களும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஏகனாபுரம் கிராமத்தில் நாளை சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும்
கிராம சபை கூட்டத்தில் புறக்கணிப்பது, பள்ளியில் நடைபெறும் சுதந்திர தின
கொண்டாட்ட விழாவிற்கு அப்பகுதி பள்ளி மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் கருப்பு கொடி ஏற்றுவது, பேரணியாக நடந்து வந்து போராட்டம் நடத்துவது என பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில்  முதல் முறையாக போராட்டம் நடைபெறும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரடியாக சென்று கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறி பேரணியை கைவிடுமாறு கூறினார். இதனை அடுத்து நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற இருந்த பேரணி ரத்து செய்துவிட்டு வீடுகளில் கருப்பு கொடி ஏந்தும் போராட்டம் மற்றும் கிராம சபை புறக்கணிப்பு போராட்டம் மட்டும் நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.