நாங்குநேரி சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து கருத்துக்கள் கேட்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், மாணவர்கள் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.
இந்நிலையில் நாங்குநேரி சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து கருத்துக்கள் கேட்கப்படும் என்றும், மாணவன் படித்த பள்ளி, உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தப்படும் எனவும் நீதியரசர் சந்துரு கூறினார். மேலும் தமிழ்நாடு முழுவதும் சென்று மாணவர்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளதா என்பது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் ஒருநபர் குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




