பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் உள்ள சுற்று வட்டாரத்தில் 13 கிராமப் பகுதிகளை ஒன்றிணைந்து 4,750 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 346 வது நாளாக பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கிராம சபை கூட்டங்களில் 6 முறை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இந்நிலையில் விமான நிலையம் அமைக்க உள்ள இடத்தில் கள ஆய்வுக்கு வருகை தந்த அரசு தரப்பு பேராசிரியர் மச்சநாதன் ஆய்வு குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலை அருகில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராமமக்கள் மதுர மங்கலம் பகுதி வரை பேரணியாக சென்றதால் போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.







