மாற்றுத்திறனாளி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு – காரணம் என்ன?

சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்த புகார் தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வினோத் பாபு மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்…

சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்த புகார் தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வினோத் பாபு மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழ்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான வினோத்பாபு, தான் சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் என்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதாகவும் கூறி பலரிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதற்காக கடையில் வாங்கிய கோப்பை மற்றும் சான்றிதழைக் காட்டி மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சர் வரை அவர் தவறான தகவல்களைக் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்த பரமக்குடியைச் சேர்ந்த தினேஷ்குமார், தவறானத் தகவல்களை கூறி வினோத்பாபு பலரை ஏமாற்றி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இதையும் படியுங்கள் : ’கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும்’ – வானதி சீனிவாசன் நம்பிக்கை

அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், வினோத்பாபுவிடம் பாஸ்போட்டே கிடையாது என்பதையும், அவர் எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை என்பதையும் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து வினோத் பாபு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.