சொத்து பிரச்னையில் உறவினரையே கட்டிப்போட்டு அடித்த கும்பல்!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சொத்து பிரச்னையில் ஒருவரை உறவினர்களே சாலையில் கட்டி போட்டு தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூர் பகுதியில் ஏசையன்…

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சொத்து பிரச்னையில் ஒருவரை உறவினர்களே சாலையில் கட்டி போட்டு தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூர் பகுதியில் ஏசையன் என்பவருக்கும் ஆனந்த் என்பவரின் தாய்க்கும் சொந்தமான வீடு உள்ளது. ஆனந்த் என்பவர் ஏசையனின்
சொந்த அக்கா மகன் ஆவார்.

இந்நிலையில் பாகப்பிரிவினை செய்யப்பட்ட நிலையில் ஆனந்தத்தின் தாய்க்கு வரவேண்டிய பணத்தை ஏசையன் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இது குறித்து கடந்த 14ஆம் தேதி ஆனந்த், ஏசையன் வீட்டுக்கு சென்று கேட்டபோது ஏசையன் அப்பகுதி இளைஞர்களை அழைத்து ஊர் விட்டு ஊர் வந்து சொத்தில் பங்கு கேட்பதாக கூறி ஆனந்தை அங்கிருந்த இளைஞர்கள் உதவியுடன் கயிறு கட்டி 3 மணி நேரம் வைத்து தாக்கியுள்ளார்.

பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்த போது கயிறுகளை அவிழ்த்து விட்டுள்ளனர்.பின்பு காயமடைந்த ஆனந்த் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தும் கூட காவல்துறையினர் தன்னை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல், தன் மீதும் இந்த பிரச்சனையில் சம்பந்தமில்லாத தனது தம்பி ஜெயக்குமார் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 14ஆம் தேதி சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

–சே.அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.