இபிஎஸ்க்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணை நடத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில் விசாரணை நடத்த காவல்துறையினருக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிச்சாமியின் வேட்பு…

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில் விசாரணை நடத்த காவல்துறையினருக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிச்சாமியின் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படியும் சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஜூன் 6க்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது. மேலும் அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இருந்தும் நீதிமன்ற உத்தரவை மீறி சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதால் காவல் அதிகாரிகள் மீது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

மேலும் சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் சேலம் மாநகர குற்றப்பிரிவுக்கு மீண்டும் நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.