நாம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு விரைவில் முன்னேற வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் சுதந்திர அமுத பெருவிழாவின் ஒரு பகுதியாக கேசவ் நினைவு கல்வி சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கல்வி என்ற அடித்தளத்தில் தான் ஒரு நாடு கட்டி எழுப்பப் படுகிறது. ஒவ்வொரு தனிநபரின் முழு திறமையை வெளிக்கொணர கல்வி தான் திறவுகோல்.
இன்றைய இளைஞர்கள் இணையதளம், மற்றும் சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துக்கின்றனர்.எனவே இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது. மாணவர்களிடையே அதிகமான வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அது அவர்களின் புரிதலை அதிகரிப்பதுடன், தொலைநோக்கு பார்வையை விரிவடைய செய்யும். வாசிப்பு பழக்கம் வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்கு உதவும்.
ஒரு ஆண் கல்வி கற்றால், அது அவனுக்கு மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டினால் ஒரு தலைமுறையே படித்தாக அர்த்தம். நரி சக்தி திட்டம் பெண்கள் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வியில் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்படுகிறது. பெண்கள் தலைமை பொறுப்புகளை வகிக்கும் வளர்ச்சிக்கு விரைவாக முன்னேற வேண்டும்.
உலகின் மிகப்பெரிய மற்றும் துடிப்பான ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் நமது காவல்துறையின் பங்களிப்பு முக்கியம். காவல்துறையை நினைத்தாலே குற்றவாளிகள் பயந்து நடுங்க வேண்டும். ஆனால், அதே சமயம் சாமானிய குடிமகன் காவல்துறையை நண்பனாகவும் பார்க்க வேண்டும்.







