நடிகர் தனுஷ் உள்ளிட்ட 14 நடிகர்களுக்கு ரெட்கார்டு விதிக்கக் கோரும் தயாரிப்பாளர் சங்கம்!

நடிகர் தனுஷ் உள்ளிட்ட 14 நடிகர்களுக்கு ரெட்கார்டு விதிப்பது குறித்து நடிகர் சங்கத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளது தயாரிப்பாளர் சங்கம். ஜூன் 18ம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில்…

நடிகர் தனுஷ் உள்ளிட்ட 14 நடிகர்களுக்கு ரெட்கார்டு விதிப்பது குறித்து நடிகர் சங்கத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

ஜூன் 18ம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் வழங்காத நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பல தரப்பில் பட்டியல் எடுத்து சம்பந்தப்பட்ட நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவெடுக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா மற்றும் யோகிபாபு உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம், அவர்கள் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர், நடிகையுடன் என்ன பிரச்சனை என்பதை கடிதம் மூலம் ஜூன் 28க்குள் சங்கத்தில் சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக இன்று பிற்பகல் தயாரிப்பாளர் சங்கம் – நடிகர் சங்கம் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் நடிகர் தனுஷ் மீதும் படத்தை முடித்துக் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தேனாண்டாள் தயாரிப்பில் தனுஷ் இயக்கிய படம் முழுமையடையாமல் இருக்கிறது. இந்தப் படத்தை தனுஷ் முடித்துத் தர வேண்டும் இல்லை என்றால் ரெட்கார்டு வழங்க வேண்டும் என தேனாண்டாள் பிலிம்ஸ் முறையிட்டுள்ளது. மேலும் அமலா பால், லக்‌ஷ்மி ராய் உட்பட 14 நடிகர், நடிகையர் மீது தயாரிப்பாளர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுப்பதாக நடிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.