உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சதவீத இடங்களில் பெண்கள் போட்டியிடு வதற்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்தக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த அவர், பெண்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதால், பெண்கள் அதிகளவில் அரசியலுக்கு வர ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதற்காக, உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 40சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும், சாதி,மத அடிப்படையில் இல்லாமல் தகுதி அடிப்படையில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி அதிக இடங்களில் வெற்றி பெற விரும்புகிறோம் எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.








