பொதுத் துறை காப்பீடு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் நிறைவேறியது.
பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களான, நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகிய நான்கு காப்பீடு நிறுவனங்களையும் தனியார்மயமாக்க முடிவு செய்த மத்திய அரசு, இதுதொடர்பான சட்ட திருத்த மசோதாவை வடிவமைத்தது.
இந்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இதன் மூலம் காப்பீடு நிறுவனங்களின் பங்குகளில் 51 சதவீதத்துக்கும் குறையாமல் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் ஏற்படுகிறது. மக்களவையில் இன்று பெகாசஸ் விவகார அமளிக்கு மத்தியில் எந்த விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். இதுதொடர்பாக சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மக்களவையின் மற்றொரு கொடிய நாள். விவாதங்கள் ஏதுமின்றி அரசு பொது இன்சூரன்ஸ் தனியார்மயச் சட்ட திருத்தம் நிறைவேற்றி இருக்கிறது மோடி அரசு. தேசியமயம் வரலாற்று சிறப்பு மிக்க முடிவு எனில் அதை சிதைக்கிற இந்த சட்ட திருத்தம் வரலாற்றின் கறையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், இன்சூரன்ஸ் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும், அதன் பின்னர் அரசு இந்த நிறுவனங்களில் 51% பங்குகளை தனது உரிமையில் வைத்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்காது.







