அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழரை நியமிக்க வேண்டும் என ஆளுநருக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பதவிவகித்து வந்த சூரப்பா கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா தலைமையில் பதிவாளர் கருணாமூர்த்தி, பேராசிரியர் ரஞ்சனி பார்த்தசாரதி ஆகியோர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது.
துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. துணைவேந்தர் பதவிக்கான நேர்காணல் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என ஆளுநருக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
தலைசிறந்த, திறமையான, நேர்மையான கல்வியாளரை துணைவேந்தராக தேர்வு செய்ய வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள், இந்நாள் பேராசிரியர்களை துணைவேந்தராக தேர்வு செய்தால், பல்கலைக்கழக ஊழியர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் ஆசிரியர் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.







