கொள்கை மற்றும் லட்சியத்திற்காக எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருந்தவர் கருணாநிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
விழாவில் சட்டமன்றத்தின் வரலாற்றை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை, தமிழ்நாடு சட்டப்பேரவை பெற்றுத்தந்ததை நினைவு கூர்ந்தார். தனது காந்த குரலால் தமிழ்நாட்டு மக்களை கட்டிப்போட்டவர் கருணாநிதி என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், சமூகநீதிக்கு அடித்தளம் அமைத்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று எனக் கூறிய அவர், எதிர்க்கட்சித் தலைவராக, அமைச்சராக, முதலமைச்சராக பேரவையில் பணியாற்றியவர் கருணாநிதி எனவும், கொள்கை மற்றும் லட்சியத்திற்காக எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருந்தவர் என்றும் கூறினார்.
இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழன்னையின் தலைமகனான கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்துள்ளார். முதலமைச்சராக மகிழ்கிறேன், கருணாநிதியின் மகனாக நெகிழ்கிறேன் என்ற அவர், “ஜனநாயக மாண்பைக் காக்கும் தமிழ்நாடு சட்டமன்றம் இன்னும் பல நூற்றாண்டு விழாக்களைக் கண்டு, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல சட்டங்களை இயற்ற வேண்டும்” எனவும் கூறினார்.







