மணிப்பூரில் கலவரம் நடப்பது இது முதன்முறையல்ல என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது..
” மணிப்பூரை பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் ஒரு பொதுவான விவாதம் நடத்த வேண்டும் என அனைவரும் கேட்டுக் கொண்டனர். மணிப்பூரில் நடக்கும் கலவரம் இப்போது முதலாவதாக நடப்பது அல்ல. அரசியல் பேசுவதாக இதனை நினைக்க வேண்டாம்.
கடந்த 2013ம் ஆண்டு மருந்துகள் உட்பட எந்த ஒரு பொருட்களும் மணிப்பூரில் உள்ள கிராமங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் கூட அங்கு செல்லவில்லை. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்போது மூன்று நாட்கள் தங்கியிருந்து அங்குள்ள முகாம்களுக்கு சென்று மக்களை சந்தித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் மணிப்பூரில் சென்று நேரில் பார்த்துக் அவர்கள் கொண்டு வந்த விபரங்களை கூட நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை. எதிர்கட்சிகள் மணிப்பூர் விபரங்களை உள்துறை அமைச்சர் இடம் தெரிவித்தால் அதற்கான விடை கிடைக்கும். ஆனால் அவர்கள் அங்கு என்ன நடந்தது என்று குறித்து பேசவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.







