இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் 2 ஆம் பாகங்கள், ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் இந்திய அளவில் பெரும் வெற்றியை பெற்றன. மேலும் அவை பாலிவுட் படங்கள் தான் இந்திய படங்கள் என்று இருந்த நிலையை மாற்றியது.
ராஜமவுலி அடுத்ததாக இயக்கி வரும் படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். 2இப்படம் மகேஷ் பாபுவின் 29 ஆவது படமாகும். மேலும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்திவிராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் காசியின் வரலாற்றை பேசும் படமாக உருவாகி வருகிறது. ஒடிஷா மற்றும் ஹைதராபாத்தை தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்காவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் வாரணாசி என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது ராஜமவுலி, பிருத்திவிராஜின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ”முதல் ஷாட்டைப் பதிவு செய்த பிறகு, நான் பிருத்திவிராஜிடம் நடந்து சென்று, எனக்குத் தெரிந்த மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் நீங்கள் என்று சொன்னேன். இந்த கொடூரமான, இரக்கமற்ற, சக்திவாய்ந்த வில்லனான கும்பாவுக்கு உயிர் கொடுத்தது திருப்திகரமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.








