முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு – உச்சநீதிமன்றம்

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து தொடரப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு உருவாக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பஞ்சாப் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், பாஜகவின் பேரணியை தொடக்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு கடந்த ஜன.5ம் தேதி பயணம் மேற்கொண்டார்.

விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்திற்கு பின்னர் ஏறத்தாழ இரண்டாண்டுகள் கழித்து பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு மேற்கொண்ட பயணம் இதுவாகும்.

இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் வான் வழியாக அவர் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் திடீரென சாலை மார்கமாக பயணிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பிரதமர் பயணிக்கும் சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாணை மேற்கொள்ள மத்திய உள்துறை சார்பாகவும், பஞ்சாப் மாநில அரசும் விசாரணை குழுவை அமைத்தது.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக லாயர்ஸ் வாய்ஸ் எனும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான இன்றைய விசாரணையில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. போராட்டக்காரர்கள் பிரதமரின் வாகனம் நின்ற இதிலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே இருந்தனர்.

இவ்வளவு அருகே அவர்களை அனுமதித்திருக்கக்கூடாது, இது மாநில அரசின் குறைபாடு ஆகும். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்த போராட்டம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை, இது மாநில உளவுத்துறையின் குறைபாடு. உரிய பாதுகாப்பு காவலர்களை கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அதிகாரிகள் தவறிவிட்டனர்.” என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, “பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் குறித்த அனைத்து விசாரணைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விசாரணைக் குழுவில் சண்டிகர் டிஜிபி, தேசிய புலனாய்வு அமைப்பின் ஐஜி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் பதிவாளர், பஞ்சாப் ஏடிஜிபி ஆகியோரை இணைக்கவும் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

வேண்டும் என்றே பந்தை எறிந்து காயம் ஏற்படுத்திய விவகாரம்: மன்னிப்புக் கேட்டார் ஷாகின் ஷா

Halley Karthik

மதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி

Halley Karthik

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது

Halley Karthik