மணிப்பூரில் 2 பெண்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் மணிப்பூர் ஆட்சியை கலைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்க கோரி கடந்த மே 3ஆம் தேதி மைதேயி சமூகத்தினர் பேரணியாக சென்றனர். இதற்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இருதரப்பு இடையேயான மோதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில், மே 4ஆம் தேதி இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தும்படி முதலமைச்சர் பிரேன் சிங், காவல்துறைக்கு உத்தரவிட்ட நிலையில், குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மணிப்பூரில் 2 பெண்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், ஏதோ ஒன்றைத் திறப்பதற்காக சென்ற பிரதமர் மோடி, மணிப்பூர் மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை.
மணிப்பூர் பற்றிய சிந்தனை வர அவரைத் தூண்டியது எது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?. மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றத்தின் கொடூர வீடியோவா அவருக்கு நினைவூட்டியது? இப்போது பிரதமர் செய்ய வேண்டிய முதல் காரியம், மணிப்பூரில் பைரன் சிங்கின் ஆட்சியை கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதுதான்.
இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா







