நம் நாட்டில் கேரளா போன்ற மாநிலங்கள் 35 சதவீத வருமானத்தை சுற்றுலாத்துறை மூலமே பெறுகின்றன. இந்த சூழ்நிலையில் கோவிட் 19 முன்னர் கொச்சியில் இருந்து டெல்லி செல்ல 4 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 10 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது . இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் சரிந்து வருகிறது.
இப்பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு மீண்டும் பழைய நிலை திரும்பும் என கேரள மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அதிகரித்து வரும் விமான கட்டணங்களால் கேரளாவின் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை பொறுத்தவரை கோடை காலத்தில்தான் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் இந்தாண்டு அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகள் வருவது சந்தேகமே, அதற்கு காரணம் விமான கட்டணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உள்ளூர் மற்றும் சர்வதே விமான கட்டணத்தை கட்டுக்குள் வைக்காவிட்டால், சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்படும். கோவிட் தொற்று காலத்திற்கு முன்னர் கொச்சியில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 10 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல கொச்சியில் இருந்து துபாய் செல்ல 12 ஆயிரம் ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 40 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. கொச்சியில் இருந்து நியூயார்க் செல்ல 65 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அக்கடிதத்தில் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.







