நாட்டின் கடந்த கால வரலாற்றை பிரதமர் நரேந்திர மோடி சரியாக புரிந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கோவாவில் வரும் 14ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 40 தொகுதிகள் கொண்ட கோவாவில் காங்கிரஸ், பாஜக, மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களமிறங்கி தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கோவாவில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கோவாவின் விடுதலை 15 ஆண்டு காலம் தள்ளிப் போனதற்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ராணுவத்தை அனுப்ப மறுத்ததே காரணம் என்ற பிரதமர் மோடியின் குற்றச் சாட்டிற்கு பதில் அளித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சர்வதேச அளவில் ஏற்பட்ட சூழ்நிலை குறித்தும், நமது நாட்டின் கடந்த கால வரலாறு குறித்தும் சரியான புரிதல் நரேந்திர மோடிக்கு இல்லை என ராகுல் காந்தி விமர்சித்தார்.

மேலும் உண்மையான பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைப்பதாகக் கூறினார். கோவா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்போம் என்றோ, பொருளாதார ரீதியில் அவர்களை முன்னேற்றுவோம் என்றோ பிரதமர் மோடி கூறவில்லை என்றும் தெரிவித்த ராகுல் காந்தி, இந்த தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். கடந்த முறை போல் இல்லாமல் இம்முறை வெற்றி பெற்ற உடன் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.







