பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையம் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். பெங்களூரிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காந்திகிராமம் செல்கிறார். இதற்காக, மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நான்கு துணை ஆணையர்களின் மேற்பார்வையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மதுரை விமான நிலையத்தைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகர் விமான நிலையம் பாதுகாப்பு மண்டலமாக உள்ளதால் டிரோன் கேமராக்கள் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் முழு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும். ஆதலால் பயணிகள் காலதாமதமின்றி சற்று முன்னரே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் தேவையற்ற நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறு மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் வானவெடிகள் வெடிக்க வேண்டாம் எனவும், புகைகள் வருமாறு எதையும் எரிக்க வேண்டாம் எனவும் தேவையற்ற நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறும் மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.







