பிரான்ஸ் மற்றும் யு.ஏ.இ. சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, வெள்ளப்பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துகொண்டு, ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு, அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது சிறப்பான வரவேற்று அளித்தார். இருவரும், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அதிபர் மாளிகையில் சந்தித்து பேசினார். எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, பாதுகாப்பு ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் இரு நாடுகளும் இந்திய ரூபாய் மற்றும் யுஏஇ நாணயம் அடிப்படையில் வர்த்தகம் நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளின் நாணயங்களின் அடிப்படையில் வர்த்தகம் நடத்தும் ஒப்பந்தம் மேலும் முதலீடுகளை அதிகரிக்கும் எனக்கூறினார்.
தொடர்ந்து யு.ஏ.இ. சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தனிவிமானம் மூலம் நேற்றிரவு டெல்லி திரும்பினார். டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அவர், டெல்லி வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
டெல்லி மக்களின் நலன் கருதி சாத்தியமான அனைத்து வேலைகளையும் மத்திய அரசின் உதவியோடு விரைந்து மேற்கொள்ளவும் ஆளுநரிடம் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







