ஓமன் நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது அரசு முறைப் பயணத்தில் ஜோர்டான், எத்தியோப்பியவை தொடர்ந்து ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் படி பிரதமர் மோடி, முதலில் ஜோர்டான் நாட்டுக்கு சென்றார். அங்கு, அந்நாட்டின் மன்னர் அப்துல்லா-II சந்தித்த பிரதமர் மோடி,  இந்தியா – ஜோர்டான் முதலீட்டாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டார். அப்போது இந்தியா – ஜோர்டான் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து பிரதமர் மோடி எத்தியோபியா நாட்டிற்கு சென்றார். அங்கு   போது  அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலியை சந்தித்த பிரதமர் மோடி அவருடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் எத்தியோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்திலும் மோடி உரையாற்றினார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயர்ந்த விருதான ’தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ வழங்கப்பட்டது.

எத்தியோப்பியா பயணத்தையடுத்து  பிரதமர் மோடி, அடுத்ததாக ஓமன் நாட்டிற்கு  புறப்பட்டுள்ளார். ஓமன் நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சென்றுள்ளார். ஓமனில் உள்ள இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

இந்த பயணம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பிரதமர் மோடியின் இந்த பயணம், இரு நாட்டிற்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட இருதரப்பு கூட்டாண்மையை மதிப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பாக இருக்கும். அதே போல பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் இது உதவும்” என்று தெரிவிக்கப்படிருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.