யுனெஸ்கோ பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்ப்பு – பிரதமர் மோடி பெருமிதம்!

யுனெஸ்கோ பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டிருப்பது பெருமையான தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் விதமாக, ஆவணங்களை அடையாளம் கண்டு, அதனை பாதுகாப்பதற்காக யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேடு உருவாக்கப்பட்டது.

கடந்தாண்டு ராம்சரித்மனாஸ், பஞ்சதந்திரம், சஹ்ருதயலோக-லோகனா ஆகிய 3 இந்திய இலக்கிய படைப்புகள், யுனெஸ்கோவின் உலக ஆசிய-பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டன.

இந்த நிலையில், நடப்பாண்டிற்கான யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில், இந்துக்களின் புனித நூலக கருதப்படும் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், சர்வதேச அங்கீகாரம் இந்திய படைப்புகளின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்த தகவலை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவிலான இந்த கவுரவம் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலை படைப்புகளையும் போற்றும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கு பெருமையான தருணம் இது. யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டிருப்பது, நமது உயரிய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும். பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை பல நூற்றாண்டுகளாக நமது நாகரீகத்தையும், உணர்வுகளையும் வளர்த்துள்ளன”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.