யாருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி சொல்லவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தூர்தர்ஷன் சார்பாக மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீதான விளக்கக் கூட்டம் சென்னை கிண்டியில் இன்று (பிப்.28) நடைபெற்றது. இந்நிகழ்வை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் & எல்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து பல்வேறு துறை சார் வல்லுநர்கள் கலந்துரையாடினர். முன்னதாக சிறப்புரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார கொள்கைகள் குறித்தும், நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து பல்வேறு துறை சார் வல்லுநர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்த அமைச்சர், “யாருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி சொல்லவில்லை” என்று கூறினார்.
மேலும், “ஒரு இயந்திரத்திற்கு உராய்வு எண்ணெய் எப்படியோ அதைபோலத்தான் அரசுக்கு வரிப்பணமும். அது எங்கு செல்கிறது? யாருக்கு செல்கிறது? என்பதை விட அதனால் அரசு இயந்திரம் சரியாக செயல்படுகிறதா என்பதுதான் முக்கியம்” என்றும் தெரிவித்துள்ளார்.
LIVE
DD Conclave on Union #Budget2022 in #DDConclaveChennai@nsitharaman @ianuragthakur@MIB_India @DDNewsChennaihttps://t.co/hEHAHxHPG1
— Dr.L.Murugan (@Murugan_MoS) February 28, 2022
அதேபோல முந்தைய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக செலவழிக்கப்பட்டுள்ளது என்றும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் முழுமையாக செலவழிக்கப்பட்டுள்ளதால், இந்த முறை உள்கட்டமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.







