வயநாடு நிலச்சரிவு : “கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும்!” – பிரதமர் மோடி உறுதி

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.  கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இந்த…

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இந்த பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி போன்ற கிராமங்களில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன.

வீடுகள், கட்டடங்கள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவை அங்கு இருந்தன என்பதற்கான சுவடே இல்லாமல் போய்விட்டது. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரளத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  இன்று (ஆக. 10) பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும், நிலச்சரிவால் வீடுகளை இழந்து முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசினார். அதன்பின்,  பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உள்பட உயரதிகாரிகளும் அமைச்சர்களும் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள் : வயநாடு நிலச்சரிவு: நிவாரண முகாம்களில் தங்கிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி!

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது :

“நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நாம் ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்து வருகிறோம். இந்த பாதிப்பானது, பல குடும்பங்களின் கனவுகளை சிதைத்துவிட்டது. உயிரிழந்தோரின் குடும்பங்கள் தனியாக தவிப்பதாக உணர வேண்டாம், நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். பேரிடரில் அனைத்தையும் இழந்து தவிப்பவர்களுக்கு உதவுவதில் மத்திய அரசு கேரள அரசுடன் துணை நிற்கும். நிதியின்றி எந்தவொரு மீட்பு மற்றும் மறுசீரமைப்ப் பணிகளும் நின்றுவிடாமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்வோம்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்துப் பேசியதாகவும், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்ததுடன் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததாகவும், பேரிடர் குறித்த தகவல் வெளியானதிலிருந்து இதுதொடர்பாக கேரள அரசிடமிருந்து தான் தகவல்களை தொடர்ந்து பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.