இலங்கையிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பித்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று (13.07.2022) தேதியிட்ட ராஜினாமா கடிதத்தில் அவர் கையெழுத்திட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியானது. மேலும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமாவை, சபாநாயகர் இன்று பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிக்க உள்ளதாகச் சொல்லப்பட்டது.
முன்னதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகச் செய்தி வெளியானது. எனினும், அதனை அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் நிராகரித்ததுடன், அவர், இன்னும் நாட்டில் இருப்பதாகவும், ஆயுதப்படையினால் அவர் பாதுகாக்கப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அதிபர் மாளிகையிலிருந்து பாதுகாப்புப் படையினரால் அதிபர் கோத்தபாய ராஜபக்சே வெளியேற்றப்பட்டார். அதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் கடல் எல்லைக்குள் கடற்படைக் கப்பலில் பாதுகாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
எவ்வாறாயினும், 11-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் முப்படைத் தளபதிகளை அதிபர் நேரடியாகச் சந்தித்ததாகவும், அதன்பின்னர் அவர் நாட்டில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் நாட்டில் எங்கு இருக்கிறார் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் இந்த வாரம் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதுடன், புதிய அதிபர் பதவியேற்கவும், அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்கவும் வழி ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அதிபரின் ராஜினாமா கடிதம் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அதிகாரி அதைச் சபாநாயகரிடம் வழங்குவார் எனச் சொல்லப்பட்டது. இறுதியாக இலங்கையிலிருந்து கோத்தபய ராஜபக்சே தப்பித்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.








