அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்களும் நிராகரிப்பட்டன.
இதனையும் படியுங்கள்: அதிமுக பொதுச்செயலாளர்களாக இருந்தவர்களின் பட்டியல் இதோ!
மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 8வது பொதுச்செயலாளரானார்.
அதிமுக வின் புதிய பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளதால் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக, தமாக மற்றும் விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.







