ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பதாக ஐநா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அவை பிரசவம் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த ஆய்வில், கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பிரசவத்தின்போது மட்டும் 2 லட்சத்து 87 ஆயிரம் பெண்கள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 3,09,000 பெண்கள் உயிரிழந்திருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு உயிரிழப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மகப்பேறு தொடர்பான நோய்கள், அதீத ரத்தப் போக்கு, உயர் ரத்த அழுத்தம், கருத்தடை பிரச்னைகள் போன்ற காரணத்தால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளை சரியான மருத்துவ வசதியுடன் தவிர்த்திருக்க முடியும் என ஐநா தெரிவித்துள்ளது. மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு சரியான மற்றும் தரமான மருத்துவ வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், தரமான மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள் இருப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக உள்ளதால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா