மழை வேண்டி அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்!

சாத்தான்குளம் அருகே மழை வேண்டி, அரசமரத்திற்கும்  வேப்பமரத்திற்கும் திருமணம் செய்து வடை பாயாசத்துடன் கிராம மக்கள் விருந்து வைத்துள்ளனர்.  தமிழகத்தில் பருவமழை காலங்களில் மழை பெய்யாமல் போனாலோ, வறட்சி ஏற்பட்டாலோ மழை வேண்டி பல்வேறு வினோதமான…

சாத்தான்குளம் அருகே மழை வேண்டி, அரசமரத்திற்கும்  வேப்பமரத்திற்கும் திருமணம் செய்து வடை பாயாசத்துடன் கிராம மக்கள் விருந்து வைத்துள்ளனர். 

தமிழகத்தில் பருவமழை காலங்களில் மழை பெய்யாமல் போனாலோ, வறட்சி ஏற்பட்டாலோ மழை வேண்டி பல்வேறு வினோதமான முறையில் வழிபாடு நடைபெறும்.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பர புரத்தில்
முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் அரசமரம் மற்றும் வேப்பமரம் ஒன்றோடு ஒன்றாகப்
பின்னிப் பிணைந்து உள்ளது.

மழை வேண்டி திருமணம் செய்து வைத்த  இந்த வினோதமான நிகழ்வு வெகு விமர்சையாக உண்மையான திருமணம் நடந்தால் எப்படி நடக்குமோ அதே போல் நடந்தது.

18 தாம்பூலத்தில் பழ வகைகள், கற்கண்டு, சாக்லெட், பூ, பட்டு போன்ற பொருட்களுடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாகப் பொதுமக்கள் மேளதாளம் முழங்க வருகை தந்தனர்.

பின்னர் கோவிலில் உள்ள முத்தாரம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள அரசமரம் மற்றும் வேப்பமரத்திற்கு முன்பு யாகசாலையுடன் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. மரத்திற்கு முன்பு நாகர் சிலை புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மரம் மற்றும் நாகர் சிலைக்குச் சிறப்புப் பூஜை மற்றும் அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் திருமணம் நடைபெறும் நிகழ்வாக மஞ்சளால் ஆன மாங்கல்யம் கட்டப்பட்டது.

அப்போது பொதுமக்கள் ஒன்றுகூடிக் குலவையிட்டு வழிபாடு செய்தனர். அதன் பின்னர் பொதுமக்களுக்குப் பிரசாதமாக மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் திருமண விழாவில் வடை பாயசத்துடன் விருந்து பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.