முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து கல்லூரி படிப்பை தொடர்ந்த இளம்பெண்; ஊடக சந்திப்பில் பகிர்ந்த அனுபவம்

குழந்தை உரிமைகளும் நீங்களும்(CRY) அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில், உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இன்று குழந்தை உரிமைகளும் நீங்களும்(CRY) அமைப்புடன் இணைந்து செயல்படும் ‘மனித உரிமை களம்’, சென்னை, எழும்பூரில் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சந்திப்பில், உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண் குழந்தைகள் ஒன்றுகூடி, தங்களின் வாழ்க்கைசார் மன உறுதி, நெகிழ்திறன் மற்றும் வெற்றிக் கதைகளை பகிர்ந்தனர். இதன்மூலம் சக பெண் தோழியற்கு சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டு, தங்களின் கனவுகளை வென்று அடைய ஊக்கப்படுத்தினர். பள்ளியிலிருந்து இடைவிலகலாகுதல், குழந்தை தொழில் மற்றும் குழந்தை திருமணத்திற்கு தள்ளப்படுதல் என சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்ட அவர்கள், நம்பிக்கையை இழக்காமல் தங்களது கனவுகளை அடைய போராடியவர்கள்.

இந்த சந்திப்பில் பங்கேற்ற எசக்கியம்மாள், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரம்மதேசம் கிராமத்தில் வசித்து வருகிறார். 21 வயதான இவர், 10ஆம் வகுப்பு முடித்தவுடன் வறுமை காரணமாக ஜவுளித் தொழிலில் வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டுத் திருப்பூருக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், CRY-யுடன் இணைந்து செயல்படும் ‘மனித உரிமை களம்’ அமைப்பின் உறுப்பினர்கள், அவரின் சூழ்நிலையை அறிந்து, அவரது பெற்றோருக்கு ஆலோசனை அளித்து, அவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்படுவதை உறுதி செய்தனர்.

அவர்களின் உதவியுடன், டிப்ளமோ இன் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். கல்வியை வெற்றிகரமாக முடித்த பிறகு, எசக்கியம்மாள் சென்னையில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். தற்போது அவர் தனது சமூகத்தில் உள்ள மற்ற பெண்களை உயர்கல்வியைத் தொடர ஊக்கப்படுத்தி, வழிகாட்டி வருகிறார்.

“பொதுவாக பெண் குழந்தைகள், 10 அல்லது 12-ஆம் வகுப்புகள் முடித்த பிறகு ஜவுளித் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். இதனால் பல பெண் குழந்தைகள், குழந்தை திருமணம் செய்துகொள்ளவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். இப்போது CRY-யுடன் இணைந்து செயல்படும் ‘மனித உரிமை களம்’ அமைப்பின் வழிகாட்டுதலுடன், அப்பெண்கள் உயர்கல்விக்கு செல்கிறார்கள். மேலும் பெண் குழந்தைகள் திருமணம் செய்து கொள்வதைக் தடுக்க உதவுகிறார்கள்” என்று எசக்கியம்மாள் கூறினார்.

அதேபோல், இந்த சந்திப்பில் பங்கேற்ற முத்துலட்சுமி, திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் கிராமத்தில் தனது மூன்று சகோதரிகளுடன் வசித்து வருகிறார். 20 வயது இளம்பெண்ணான இவர் 12-ஆம் வகுப்பை முடித்தவுடன், 17 வயதாக இருந்தபோது, தினசரி கூலி வேலை செய்யும் அவருடைய பெற்றோர், அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

CRY-யுடன் இணைந்து செயல்படும் ‘மனித உரிமை களம்’ அமைப்பின் தலையீட்டால், அவரது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அவர்கள், அவரின் பெற்றோருக்கு ஆலோசனை அளித்து, முத்துலட்சுமியை கல்லூரியில் சேர்த்தனர். இன்று மானூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முத்துலட்சுமி இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் பயின்று வருகிறார்.

“நான் அரசு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவியாக விளங்கினாலும், பொருளாதார நெருக்கடியினால் எனது பெற்றோர், அனைத்து குழந்தைகளுக்கும் உணவளிக்க முடியாத நிலையில் என்னை திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர். நான் எனது கனவினை கைவிட தயாராக இல்லை. சரியான வழிகாட்டுதலால் நான் உயர் கல்வியில் பயில்கின்றேன். என்னைப்போன்று மற்ற பெண்களும் தங்களது கனவினை கைவிடாது முயன்று உயர் கல்வியை தொடர நான் தூண்டுகோலாக அமைவேன்” என்று முத்துலட்சுமி கூறினார்.

இன்று நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பினை CRY–யுடன் இணைந்து செயல்படும் ‘மனித உரிமை களம்’ அமைப்பின் இயக்குநர் பரதன் மற்றும் SCSTEDS அமைப்பின் இயக்குநர் தங்கராஜ் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தனர். ‘பெண் குழந்தைகளுக்காக பெண் குழந்தைகளால்’ எனும் தளத்தின் மூலம், உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு நம்பிக்கை மற்றும் ஊக்கத்தை அளித்து நேர்மறை சிந்தனையை தூண்டினர்.

‘மனித உரிமை களம்’ அமைப்பின் இயக்குநர் பரதன், “உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மற்ற பெண் குழந்தைகள், தங்களின் கனவுகளை ஒருபோதும் கைவிட வேண்டியதில்லை. பெரிய கனவுகளை அவர்கள் காண வேண்டும். அதில் வெற்றியடைய வேண்டும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லி நிலநடுக்கம் – தெருவில் தஞ்சமடைந்த குஷ்பு

G SaravanaKumar

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை

G SaravanaKumar

கொரோனா: 202 நாளுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆன பெண்ணுக்கு பிரமாண்ட வரவேற்பு!

Halley Karthik