”மணிப்பூரில் அமைதி திரும்ப பிரார்த்திக்கிறேன்” என இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களில் மெய்டீஸ் பிரிவைச் சேர்ந்த பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.
மெய்டீஸ் பிரிவினரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் மணிப்பூரின் உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடைபெற்றது.
மாணவர்கள் அமைப்பினரின் இந்த பேரணிக்கு பழங்குடி அல்லாத பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு முற்றி மோதலாக மாறியது. இந்த மோதல் மணிப்பூர் மாநிலம் முழுவதும் பரவியது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மலையோர மாவட்டங்களில் வீடுகள், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன.
மாநிலம் முழுவதும் வன்முறை பரவிய நிலையில் தமிழர்கள் அதிகளவில் வாழும் மோரோ கிராமத்திலும் வன்முறை வெடித்தது. இந்த கிராமம் மணிப்பூர்-மியான்மர் எல்லையோரத்தில் அமைந்துள்ளது. இந்த வன்முறையில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. மோதல்களை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் பொதுமக்கள் சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைதளத்தில் போலி வீடியோக்கள் பரவியதே கலவரம் வெடிப்பதற்கு முக்கிய காரணம் என கருதுவதால் 8 மலையோர மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகள் 5 நாள்களுக்கு முடக்கப்பட்டுள்ளன. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மத்திய பாதுகாப்புப் படைகள் விமானம் மூலம் மணிப்பூருக்கு வந்துள்ளன.
மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில், கலவரக்காரர்களை கண்டவுடன் சுட அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நிலைமை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை எந்த ரயிலையும் இயக்க வேண்டாம் என்று மாநில அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே நேற்று முன் தினம் அறிவித்தது.
பிரபல இந்திய குத்துச் சண்டை வீராங்கணையான மேரி கோம் “ எனது மாநிலம் பற்றி எறிகிறது. தயவுசெய்து மோடி, அமித் ஷா ஆகியோர் உதவுங்கள் ” என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
”என் எண்ணங்கள் உங்களுடன்தான் உள்ளது. மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறேன் ” என இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
Praying for Peace …for all the #peopleofManipur My thoughts are with you 🌹
Harmony https://t.co/LXbnJhQWoC via @YouTube
— A.R.Rahman (@arrahman) May 7, 2023








