பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்களது சமூக வலைதளங்களில் ”பொதிய ஏத்தி வண்டியிலே… பொள்ளாச்சி சந்தையிலே” பாடலின் ரீமிக்ஸ் வெர்சனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மொபைல் போன் பயன்படுத்தாத மனிதர்களே இல்லை. ஆறாம் விரலாக மாறிப் போன மொபைல் போன் மற்றும் அதன் புதிய புதிய தொழில்நுட்பம் மூலம் நாள்தோறும் ஏதோ ஒன்று மக்களால் அதிகம் பேசு பொருளாகிறது. ஒருநாள் சாட்ஜிபிடி ட்ரெண்டிங்கில் இருந்தால் மறுநாள் பாகுபலி சமோசா ட்ரெண்டிங்கில் இருக்கும்.
தினந்தோறும் சினிமா, பொழுதுபோக்கு மட்டுமல்லாது வெவ்வேறு தளங்களில் புதிய புதிய விசயங்கள் ட்ரெண்டாவது வழக்கம். பத்து வருடங்களுக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் படம் ட்ரெண்டானதை போல, பல வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனின் அன்பே சிவம் ட்ரெண்டாவதை போல இந்த நாள் எந்த விசயம் ட்ரெண்டாகும் என கணிக்க முடியாத அளவுக்கு புதிய ஒன்று பேசுபொருளாகும்.
இந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் , இசை ஜாம்பவான் டி.எம்.சௌந்தர்ராஜனின் குரலில், மக்களை பெற்ற மகராசி படத்தில் இடம்பெற்ற மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறுபூட்டி பாடல் தற்போது அனைத்து சமூக வலைதள பக்கத்திலும் ட்ரெண்டாகி வருகிறது.
”மணப்பாறை மாடு கட்டி” பாடலை நாட்டுபுறப் பாடகர் புஷ்பனம் குப்புசாமி சில வருடங்களுக்கு முன்பு ரீமிக்ஸ் செய்து பாடியிருந்தார். தற்போது இந்த பாடல்தான் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதிலும் குறிப்பாக இப்பாடலின் சரணத்தில் வரும் “பொதியை ஏத்தி வண்டியிலே, பொள்ளாச்சி சந்தையிலே, விருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு, நீயும் வித்து போட்டு பணத்த எண்ணு செல்லக் கண்ணு” எனும் பாடலின் வரிகளுக்கு ஏற்ப இளசுகள் முதல் பெரியவர்கள் வரை ரீல்ஸ், ஷார்ட்ஸ் என பதிவிட்டு கலக்கி வருகின்றனர்.







