புதுச்சேரியில், தரமான பிபிஇ கிட்டை அரசு வழங்காததால் செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவதாக அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் என இதுவரை 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில், தலைமை செவிலியராக பணியாற்றும் பாக்கியலட்சுமி என்பவர், ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், அரசு தங்களுக்கு தரமான பிபிஇ கிட் வழங்குவதில்லை என்றும், இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் துணைநிலை ஆளுநருக்கு பலமுறை கடிதம் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை, என்றும் கூறியுள்ளார்.
இதேபோல் தரமற்ற பிபிஇ கிட் அணிந்து பணிபுரிவதால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், நோய் தொற்று எளிதில் ஏற்படுவதாகவும் செவிலியர்கள் தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தலைமை செவிலியர் ஒருவர் வெளியிட்டுள்ள இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.







