பொன்னியின் செல்வன் சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம் -கமல்ஹாசன்

பொன்னியின் செல்வன் சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம் என கமல்ஹாசன் கூறினார்.  மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும்…

பொன்னியின் செல்வன் சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம் என கமல்ஹாசன் கூறினார். 

மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் முதல் பாகம் கருதப்படுகிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த 20 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (29.03.2023) நடைபெறும் என்று படக்குழு  ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், மாலை 6 மணிக்கு துவங்கி ந்டைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுடன் திரைத்துரையினர் பலர் கலந்துக்கொண்டனர். குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது விழாவில் பேசிய கமல்ஹாசன்,  சின்ன வயதில் இருந்து என்னை இந்த மேடையில் நிறுத்தி வைத்துள்ள தமிழ் மக்களுக்கு நன்றி. அதன் உணர்வை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று தம்பி சிம்புவிற்கு தெரியும். இது தொழில் அல்ல கடமை. சந்தோஷமாக இருக்கிறேன் அதற்கு சம்பளமும் தருகிறார்கள்.

சிறந்த கலைஞர்களுடன் பணியாற்றிய வாய்ப்பு கிடைத்துள்ளது. சிலது கைவிட்டும் போனது. இந்த படம்போன்று. மணிரத்னத்தை பார்த்து பொறாமை கொள்ளும் நபரின் நானும் ஒருவன். முதலாமானவர் பாரதிராஜா. இப்படி பட்ட‌ படத்தை இயக்கி விட்டு அமைதியாக மணிரத்னம் அமர்ந்திருக்கிறார்.

இது எங்கே போகும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. துபாயில் ஏஆர் ரகுமான் ஆர்கஸ்ட்ராவில் பாடலை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் பொறாமைப்பட நேரமில்லை. வாழ்க்கை சிறியது. சினிமா வாய்ப்பு இன்னமும் சிறியது. அதில் கிடைக்கும் வாய்ப்புகளை ஒன்றாக இருந்து ரசிக்க வேண்டும். காதலா வீரமா என்றார்கள்.

காதலுடன் கலந்த வீரம் வேண்டும். காதலும் வீரமும் இன்றி தமிழ் கலாச்சாரம் கிடையாது. இதுதான் நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. பக்திமார்க்கம் பிறகு வந்ததுதான் ‌. உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்பதை இப்படத்தில் மீண்டும் நம்மிடம் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். இதில் யாராவது சொதப்பினாலும் கனவு கலைந்துவிடும். இது சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம்.

இதனை தூக்கிப்பிடிக்க வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் இவர்களுக்கு வாழ்த்து சொல்கின்றேன். இன்னும் பல வெற்றி மேடைகள் மணிரத்னத்திற்கு காத்துக்கொண்டு உள்ளது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு உள்ளது.

இதுபோன்ற வரலாற்று படம் எடுக்க முடியாது என்ற பயம் எல்லோருக்குமே உண்டு. மணிரத்னத்திற்கும் அந்த பயம் இருந்திருக்கும். ஆனால் வீரம்னா என்னனு தெரியுமா பயம் இல்லாதது போன்று நடிப்பது . நானும் மணிரத்னமும் இணையும் படம் பற்றி இப்போது பேச வேண்டாம். இது பொன்னியின் செல்வன் 2க்கான மேடை என விழாவில் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.