பொன்னியின் செல்வன்-2 படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் 2.7 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த 20ம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். மேலும் படத்தில் நடித்த ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், குஷ்பு உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ட்ரைலர் வெளியாகி 12 மணி நேரமே ஆன நிலையில் 2.7 மில்லியன் பார்வைகளை யூடியூப் டிரெண்டிங்கில் பொன்னியின் செல்வன்-2 முதலிடத்தில் உள்ளது. இந்த ட்ரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காட்சிகள் மிக பிரமாண்டமாகவும், அதிரடி சண்டை காட்சிகளுடன் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. கதையின் போக்கை 3 நிமிடங்களில் ட்ரைலரில் இயக்குநர் காண்பித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.







