திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முறையான குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் 21 வது வார்டுக்குட்பட்ட ஆயிஷாபி நகர், நதிசீலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வழங்குவதில்லை எனவும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாகவும் கூறப்படுகிறது.
10 நிமிடங்களிலே நிறுத்தி விடுவதால் ஐந்து குடங்களுக்கு மேல் தண்ணீர் கிடைப்பதில்லை எனவும் இதனால் நோன்பு காலத்தில் தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து பல முறை புகார் அளித்தும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி நிர்வாகிகளிடம் முறையிடுங்கள் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
—கா. ரூபி







