அதிமுக மூத்த தலைவர் பொன்னையனின் கருத்து சரியானது அல்ல என சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்காக செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட முடியுமா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்தார். அப்போது தமிழ்நாட்டில் இருந்து ஏற்கனவே இருவருக்கு பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு திமுகவால் தான் கைநழுவிப் போனது. தற்போது தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருந்தார்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்து குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது தமிழ்நாட்டில் இருந்து இரு பிரதமர்களை தவறவிட்டதாக அமித்ஷா கூறியதில் உண்மைத்தன்மை இருக்கிறது. அதை யாராலும் மறுக்க முடியாது என கூறிய அவர், பாஜகவின் கொள்கைகளால், அதிமுகவின் வாக்கு வங்கியை இழந்துவிட்டோம். மதத்தை கடைபிடிப்பதால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு வங்கியை அதிமுக இழந்து விட்டது. பாஜகவின் கொள்கையை மாற்ற சொல்லியுள்ளோம். மாற்றுவார்கள் என நம்புகிறோம் என பொன்னையன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வழியே பேசிய சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொன்னையனின் கருத்து சரியானது அல்ல. தமிழ்நாட்டில் அதிமுக, திமுக கூட்டணிகளில் பாஜக தான் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான். தமிழ்நாட்டில் இருந்து யார் பிரதமரானாலும் பாஜக வரவேற்கும் என கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








