பொங்கல் விடுமுறை ; சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் – பயணிகள் கடலில் மூழ்கும் ரயில் நிலையங்கள்….!

தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள் . தமிழ் நாடு மட்டுமின்றி உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள் இந்நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அதன் படி இந்த ஆண்டு நாளை (ஜன.14) போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து நாளை மறுதினம் (ஜன.15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன் பின்னர் வெள்ளிக்கிழமை (ஜன.16) மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று நாளும் அரசு விடுமுறையாகும். மேலும் சனி, ஞாயிறு என அடுத்தடுத்து 5 தினங்கள் விடுமுறை வருகிறது.

சென்னை மற்றும் பிற பகுதிகளில் பணி காரணமாக வசிக்கும் மக்கள் தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பப்படுவர். எனவே இன்று மாலை முதல் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்துகள், ரெயில்கள் மூலமும் சென்னை நகரை விட்டு புறப்பட்டு கொண்டு இருக்கின்றனர். சிலர் தங்களது சொந்த வாகனங்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு சென்றாலும் பெரும்பாலானவர்கள் பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் தங்களது பயணத்தை தொடர்கின்றனர்.

இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் குவிந்துள்ளனர். முன்பதிவில்லாத பெட்டிகளில் இடம்பிடிக்க முண்டியடித்துக்கொண்டனர். இதனால் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. பயணிகள் முண்டியடிப்பதை தவிக்க போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.