தேர் விபத்து: முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி

தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்அமைச்சர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தஞ்சை மாவட்டத்திலுள்ள களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.…

தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்அமைச்சர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தஞ்சை மாவட்டத்திலுள்ள களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தேர் களிமேடு பகுதியில் உள்ள தெருக்கள் வழியாக சுற்றி வந்து கொண்டிருந்த போது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதாக கூறப்படுகிறது.

தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில், சந்தோஷ், ராஜ்குமார் ஆகிய சிறுவர்களும், மோகன், பிரதாப், ராகவன், அன்பழகன், நாகராஜ், செல்வம், சாமிநாதன், கோவிந்தராஜ் ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிறுவன் பரணிதரன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கோயில் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு விரைந்தார். களிமேடு கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சாரம் பாய்ந்து தீக்கிரையான தேரை பார்வையிட்டார். உயிரிழந்த 11 பேரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

தொடர்ந்து தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் 15 பேரை சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் , திருவிழாக்களில் விபத்துகளை தடுக்க ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இது போன்ற துயர சம்பவங்களில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.