விடுதலை திரைப்படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தது குறித்து பார்க்கலாம்.
வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ’விடுதலை’. ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கதை முழுமையாக சினிமா ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று வெற்றிமாறன் விரும்பியதால் 2 பாகங்களாக இப்படத்தை வெளியிடுகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் விடுதலை திரைப்படம் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் நேர்மறையான விமர்சனங்களையே தந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அவ்வாறு முக்கிய பிரபலங்கள் தெரிவித்த பாராட்டுக்களின் தொகுப்பை காணலாம்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
“அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது. அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது.
வெற்றிமாறன் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது ‘வெற்றிமாறன் படைப்பு’ என முத்திரை பதித்துள்ளார்”
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
“உலக சினிமா அளவிற்கு படம் எடுப்பதற்கு, நம்மிடமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்திருக்கிறது. இதுவொரு திரைக்கதை மட்டுமல்ல, நெடுங்காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் சுமக்கும் ஒரு கனத்த உணர்வு. இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார். இதற்கு முன்னால் நீங்கள் பார்த்த சூரியை இந்த திரைப்படத்தில் காண முடியாது”
சி. மகேந்திரன், கம்யூனிஸ்ட் கட்சி
“ஆதிக்க சமூகத்தில் ஒருவன், உயிரையும் அர்ப்பணித்துக் போராட்டக் களத்தில் ஏன் குதிக்கிறான். ஆயுதம் ஏந்துகிறான் என்பதற்கான காரணத்தைப் படம் சித்தாந்தப் பூர்வமாக விளக்கிறது. கார்பரேட் உலகமயத்தில் எத்தனை சூதாட்டங்கள். இதை பாதுகாக்கும் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து, திரைப்படம் ஆயுதம் ஏந்துகிறது. சில காட்சிகளில் நம் முன்னோர்கள் நடத்தியப் போராட்டங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. என் மனம் பெருமிதம் கொள்கிறது. இயக்குநர் வெற்றிமாறனுக்கும் குழுவினருக்கும் என் புரட்சிகர வாழ்த்துக்கள்”
கார்த்தி
”விடுதலை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்”
அல்ஃபோன்ஸ் புத்திரன், இயக்குநர்
”இதை சாதாரண மாற்றம் என்று மட்டும் கூறிவிட முடியாது. இது சூரியின் பரிணாம வளர்ச்சி. அவர் மீது நம்பிக்கை வைத்து இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கும், அவருக்கு இப்படியான ஒரு பாதையை வகுத்துக் கொடுத்ததற்கும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி”
கயல் தேவராஜ், குணச்சித்திர நடிகர்
“நீ படிப்படியாய் முன்னுக்கு வந்தவன். நகைச்சுவையில் வெற்றிக்கொடி பறக்கவிட்டாய். இன்று விடுதலை திரைப்படத்தில் உனது எதிர்கால லட்சியங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். விடுதலை முதல் பாகத்தினுடைய கதையின் நாயகனாக உன் முகவரி சொல்லும். வெற்றி, வெற்றி”